Saturday, March 22, 2025

அறத்துப்பால் – இல்லறவியல்: அதிகாரம் 19. புறங்கூறாமை

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

பொருள்: அறத்தைப் பேசாதவன், கேடுதரும் செயல்களில் ஈடுபடுபவன் என்றாலும்கூட, பிறரைப் பற்றிப் புறம் பேசாது இருந்தால் அது அவனுக்கு நன்மை பயக்கும்.

தொடைநயம்: இணை மோனை, அடி இயைபு.

அறங்கூறான், புறங்கூறான் வினையாலணையும் பெயர்கள்.

 

182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

பொருள்: ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் புறம்பேசிவிட்டு, அவரைக் கண்டதும் அவரிடம் பொய்யாகச் சிரித்துப் பேசுவது, அறத்தைப் பழித்துத் தீய வழியில் நடப்பதைக் காட்டிலும் கேடானது.

அறனழீஇ – புறனழீஇ, அல்லவை செய்தல் – பொய்த்து நகை. இவற்றை நிரல்நிரையாகக் கொள்ள வேண்டும்.

தொடைநயம்: இணைமோனை, அடி இயைபு.

அறனழீஇ, புறனழீஇ-சொல்லிசை அளபெடைகள்.

 

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கம் தரும்.

பொருள்: காணாதபோது ஒன்றும், கண்டால் இன்னொன்றுமாகப் புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட, இறந்துபோதல், அறநூல்களில் சொல்லப்பட்ட நன்மைகளை அவனுக்கு வழங்கும்.

அறம்-ஆகுபெயர்.

தொடைநயம்: அடி எதுகை.

 

184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல்.

பொருள்: ஒருவரின் குறைகளைப் பற்றிக் கடிந்துரை்ப்பதென்றாலும், அதை அவரது முகத்துக்கு முன்னே செய்ய வேண்டும். அவர் இல்லாத இடத்தில் பின்விளைவுகளைச் சிந்திக்காமல், அவரைப் பற்றிப் புறம் சொல்லக்கூடாது.

குறளில் முரனணி பயின்று வந்துள்ளது.

கண்ணற-இரக்கம் இல்லாமல்.

சொல்லற்க - வியங்கோல் வினைமுற்று.

தொடைநயம்: இணைமோனை.

 

185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையால் காணப் படும்.

பொருள்: அறத்தைப் பற்றி விதந்தோதும் ஒருவன், நெஞ்சத்தால் அறம் அற்றவன் என்பதை, அவன் புறம் பேசுகிற கீழ்மையால் அறியலாம்.

புன்மை-கீழ்மை.

தொடைநயம்: ஒரூஉ இயைபு, பொழிப்பு மோனை.

 

186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.

பொருள்: பிறரைப் பற்றிப் புறம் சொல்பவனின் பல தீச்செயல்கள் ஆராயப்பட்டு, அவனுடைய குற்றங்கள் பலமாகப் பேசப்படும்.

தொடைநயம்: பொழிப்பு எதுகை, அடி எதுகை.

 

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

பொருள்: சிரித்துப் பேசி, நட்பைப் பேணிக்கொள்ள தெரியாதவர், புறங்கூறும் தன் இயல்பால், நண்பர்களையும் பகைவர்களாக மாற்றிவிடுவர்.

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

 

188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.

பொருள்: நெருங்கிப் பழகியவர்களின் தவறுகளையே அவர்கள் இல்லாத இடத்தில் பிறரிடத்தில் பேசத் துணிந்தவர்கள், அவர்களுக்குத் தொடர்பில்லாதவர்களைப் பற்றி என்னவெல்லாம் பேசமாட்டார்கள்?

துன்னியார் – நெருக்கமானவர்கள்.

தொடைநயம்: பொழிப்பு மோனை.

 

189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.

பொருள்: ஒருவர் இடத்தைவிட்டு நிங்கியமை கண்டு, அவரைப் பற்றிப் புறம் சொல்பவரையும் இந்த நிலம் கைவிடாது சுமக்கிறதே, அதன் காரணம், இத்தகைய கொடியவர்களையும் கைவிடாது சுமப்பதே தனக்கு அறம் என்று நிலம் நினைப்பதாலோ என்னவோ!

பொறை – பொறுமை, சுமை.

தொடைநயம்: ஒரூஉ இயைபு, இணைமோனை.

 

190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பொருள்: பிறருடைய குற்றங்களைக் கண்டு புறம்பேசுபவர்கள், தன்னைத்தான் உற்றுநோக்கி, தன்னிடம் இருக்கிற குற்றங்களைக் களைய முயன்றால், அவர்களின் ஆன்மாவுக்கு எவ்வித தீங்கும் நேராது, நிம்மதியான வா        ழ்வை வாழலாம்.

ஏதிலார் – பிறர்.