Monday, March 10, 2025

அறத்துப்பால் - இல்லறவியல்: அதிகாரம் 12. நடுவுநிலைமை

111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்: பகைவர், நண்பர், அயலவர் என்ற வேறுபாடு இல்லாது, அனைவரிடத்திலும் ஒரே வகையான அறத்தையும், நீதியையும் பேணுவதே நடுவுநிலைமை எனப்படும். அதுவே, தகுதி, நேர்மை என்கிற தூய தமிழ்ச்சொற்களால் குறிக்கப்படுகிறது. யோக்கியதை என்ற வடசொல்லை எடுத்தாண்டால், நம்மவர்க்கு இன்னும் நன்றாய் விளங்குகிறது என ஆதங்கப்படுகிறார் பாவாணர்.

தொடைநயம்: ஒரூஉ எதுகை

 

112. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

பொருள்: முந்தைய குறளில் நடுவு நிலைமையைத் தகுதி எனச் சொன்னவர், இந்தக் குறளில் செப்பம் என்கிறார். அதாவது நேர்த்தி. அது சொல்நேர்த்தி, செய் நேர்த்தி இரண்டையும் குறிக்கும் என்றே கருதலாம். மனத்தால் நடுவுநிலை கொள்பவனின் செயலும் சொல்லும் அதை அப்படியே வழிமொழிவதாய் அமைதலே செப்பம். அத்தகைய ஒருவர் பெற்ற செல்வம், சிறிதும் குறைவின்றி அவரின் வழித்தோன்றல்களுக்கும் பயனுடையதாய் அமையும்.

எச்சம் – அவரின்றி எஞ்சிய அவரின் வழித்தோன்றல்கள்,

ஆக்கம் - செல்வம்,

ஏமாப்பு - காவல்.

உடையவன்-வினையாலணையும் பெயர்

 

113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்.

பொருள்: நடுவு நிலையிலிருந்து விளகுவதால் பெறப்படும் செல்வம், மிகுந்த பலனைத் தரக்கூடும் என்றாலும், அத்தகைய வழியில் வரும் செல்வத்தை அப்போதே விட்டொழிக்க வேண்டும். நடுவுநிலை தவறுதலை  நடுவு இகத்தல் என்ற சொல்லால் குறித்திருக்கிறார் வள்ளுவர். இச்சொல்லைப் பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால், தமிழ் மேலும் செழுமையுறும்.

இகத்தல் – நீங்குதல், தவறுதல்.

தொடை நயம்: பொழிப்பு மோனை, அடி இயைபு.

 

114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

பொருள்: ஒருவர் நேர்மை உடையவரா அல்லாதவரா என்பதை அவர் மறைவுக்குப் பின் நிலைக்கும் புகழாலும், அவருடைய மக்கட்செல்வத்தாலும் அளவிடலாம்.

தொடைநயம்: இணைமோனை.

தக்கார், தகவிலர்-வினையாலணையும் பெயர் உம்மைத்தொகை என்றுகூட வரையறுக்கலாம்.

 

115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி.

பொருள்: ஆக்கத்தால், புகழால் ஒருவருக்கு ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி வருவது உலக வாழ்வின் இயல்பு. ஆகையால், அந்த மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், தன் நெஞ்சத்தில் எப்போதும் நடுவுநிலைமை பிறழாமல் இருப்பதே சான்றோருக்கு அழகாகும்.

அணி – அழகு,

கோடாமை – கோணாமை, தவறாமை.

கேடும் பெருக்கமும்-எண்ணும்மை,

கோடாமை-எதிர்மறைத் தொழிற்பெயர்.

 

116. கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

பொருள்: ஒருவரது நெஞ்சம், நடுவுநிலை தவறி, தீமையானவைகளைச் சிந்திக்கத் தொடங்கும் அந்த நிமிடத்திலேயே,  அவர் தனக்கு அழிவும் தொடங்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

நடுவொரீஇ என்ற சொல்லை இன்னிசை அளபெடை என்கிறார் பாவாணர். அப்படித்தானா என்பதை அறிஞர்கள் சொல்ல வேண்டும்.

நடுவொரீஇ – நடுவுநிலை நீங்கி.

தொடைநயம்: அடி எதுகை.

 

117. கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

பொருள்: நடுவுநிலை தவறாது வாழ்பவரின் வறுமை, அதனால் அவருக்கு ஏற்படும் உலகியல் தாழ்வு அனைத்தையும் ஆன்ற பெருமக்கள் ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். மாறாக, அவற்றையும் அவரின் புகழுக்கு ஒரு மகுடமாகவே சூட்டுவர்.

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

உலகம்-ஆகுபெயர்.

 

118. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.

பொருள்: சமமாக நின்று, எப்பக்கமும் சாய்ந்துவிடாமல் தன் மேலே வைக்கப்படும் பொருளின் எடை இவ்வளவு என்று சீர்தூக்கிப் பார்த்துச் சொல்லும் தராசுபோல, நடுவுநிலைமையுடையவர்கள் திகழ வேண்டும்.

குறளில், போல என்ற உவம உறுபு வெளிப்படையாகப் பயின்று வந்துள்ளதால், இது உவமையணி ஆகும்.

 

119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

பொருள்: பக்க சார்பற்ற தெளிந்த சொற்கள் ஒருவரிடமிருந்து வெளிப்படுவதே நேர்மை. அதற்கு அடிப்படையாக அமைவது மனதின் பக்க சார்பற்ற நடுவுநிலைமை.

சொற்கோட்டம், உட்கோட்டம் எவ்வளவு செறிவான சொற்கள். நாம் ஏன் இவற்றையெல்லாம் உரையாடலில் பயன்படுத்தக்கூடாது?

தொடைநயம்: அடி இயைபு.

 

120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

பொருள்: பிறருடைய வணிகப் பொருளையும் தம்முடைய பொருள்போல் காத்து, வணிகம் செய்வோருக்கே தொழிலில் பெருக்கம் உண்டாகும்.

தொடைநயம்: பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை.