Saturday, June 28, 2025

பொருட்பால்: அரசியல்: 60. ஊக்கமுடைமை

591. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

பொருள்:  மனதில் ஊக்கம் கொண்டவர்களே உடையவர்கள் அதாவது செல்வந்தர்கள் எனப்படுவார்கள். அது இல்லாதவர்கள் வேறு எதைக் கொண்டிருந்தாலும் இல்லாதவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

தொடைநயம்: அடிமோனை/எதுகை

உடையர்-வினையாலணையும் பெயர்.

 

592. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

பொருள்: எந்த ஒரு சூழலிலும் மனதை விட்டுவிடாமல் அதன் ஊக்கம் குன்றாமல் காப்பவனுக்கு அதுவே செல்வமாகும். மற்ற பொருளுடைமை எல்லாம் என்றேனும் ஒருநாள் அழிந்துபோகும்.

தொடைநயம்: கூழை மோனை/இயைபு.

 

593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்: மன உறுதிகொண்டவர்கள், தங்களது செல்வத்தை இழந்தாலும் கலங்கமாட்டார்கள்.

ஆக்கம் – செல்வம்,

கைத்துடை – கையிருப்பு.

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

 

594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை.

பொருள்: செல்வமானது, தளராத ஊக்கம் உடையவனின் முகவரியைத் தேடிக்கொண்டு தானே அவனிடம் போய்ச்சேரும்.

அதர்வினாய் – தானாக,

அசைவிலா – தளராத.

தொடைநயம்: அடி இயைபு.

 

595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

பொருள்: நீர் மட்டத்தின் அளவைப் பொருத்தே தாமரையின் அடித்தண்டு வளர்ச்சி அமையும். அதுபோல, மக்களின் உள்ள உயர்வுக்கு ஏற்ப அவர்களின் பிற உயர்வுகள் அமையும்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

வெள்ளம் – நீர்.

தொடைநயம்: அடி இயைபு.

 

596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள்: எப்போதும் உயர்வான எண்ணங்களைக்கொண்டிருக்க வேண்டும். அந்த உயர்வான எண்ணங்களால் நமக்குப் பெரிதாக எந்த ஒரு நன்மையும் நடந்துவிடவில்லை என்றாலும், உயர்வாக எண்ணுதலைக் கைவிடக்கூடாது.

உள்ளுதல் – நினைத்தல்.

தொடைநயம்: பொழிப்பு மோனை, அடி எதுகை.

 

597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பில்

பட்டுப்பாடு ஊன்றுங் களிறு.

பொருள்: போர்க்களத்தில் உடல் முழுக்க அம்புகள் துளைத்து உட்சென்று வலியை ஏற்படுத்தியபோதும், யானை தன் ஊக்கத்திலிருந்து தளராமல் போரிடும். அதுபோல, தங்களுக்கு அழிவு வந்தவிடத்திலும் ஊக்கம் உடையவர்கள் தங்கள் ஊக்கத்தைக் கைவிடமாட்டார்கள்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

புதையம்பு – அம்புக்கட்டு,

களிறு – யானை.

தொடைநயம்: ஒரூஉ எதுகை.

 

598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

பொருள்: உள்ளத்தில் ஊக்கம் அதாவது மனநிறைவு இல்லாதவர்கள், கொடுக்கும் எண்ணம் அற்றவர்களாகவே இருப்பார்கள். அதனால், அவர்கள் தங்களைப் பெரும் வள்ளல்கள் என்று செருக்கோடு சொல்லிக்கொள்ள இயலாது.

வள்ளியம் – கொடைத்தன்மை.

தொடைநயம்: ஒரூஉ மோனை, அடி எதுகை.

 

599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்: பெரிய உடல், கூரிய கொம்புகளைக் கொண்டிருந்தாலும், யானை புலியைக் கண்டால் அஞ்சி ஓடும். அதுபோல, தன்னைவிட உடல் வலிமை குறைந்தவர்கள், உள்ள ஊக்கத்தில் தன்னையும் விஞ்சியவர்கள் என்றால், அவர்களுக்கு அஞ்சித்தான் ஆக வேண்டும்.

குறளில் வேற்றுப்பொருள் வைப்பணி (பிறிது மொழிதல்) பயின்று வந்துள்ளது.

பரியது – வலிமையானது,

கூர்ங்கோடு – கூரிய கொம்பு,

வெரூஉம் – அஞ்சும்.

வெரூஉம்-இன்னிசை அளபெடை.

 

600. உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு.

பொருள்: உள்ளத்தில் ஊக்கத்தோடு இருப்பதே ஒருவருக்கு வலிமையாகும். அத்தகைய ஊக்கம் இல்லாதவர்கள், உருவத்தில் மனிதர்கள் என்றாலும், மரத்துக்கே ஒப்பாவார்கள்.

உரம் – வலிமை,

வெறுக்கை – ஊக்கம்.

தொடைநயம்: இணைமோனை, அடி எதுகை.