Saturday, June 28, 2025

பொருட்பால்: அமைச்சியல்: 73. அவை அஞ்சாமை

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்: சொற்களின் வலிமை அறிந்த கற்றவர்கள், அவையின் தன்மையை உணர்ந்து, பொருந்தாத சொற்களைப் பேசமாட்டார்கள்.

தொடைநயம்: கூழை மோனை, அடி எதுகை.

 

722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

பொருள்: கற்றவர்களிடம் தான் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும்படியாக உரைக்கத் தெரிந்தவர் கற்றவரினும் மேம்பட்டவர் ஆவார்.

தொடைநயம்: கீழ்க்கதுவாய் மோனை/எதுகை, அடிமோனை/எதுகை.

குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணி பயின்றுவந்துள்ளது.

 

723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

பொருள்: போரிட்டு உயிரிழக்கத் துணிந்தவர் உலகில் பலருண்டு. ஆனால், அவையில் வாதிட்டு வெற்றிபெறத் துடிப்பவர் சிலரே ஆவார்.

தொடைநயம்: கூழை இயைபு, அடி இயைபு.

குறளில் முரண் அணி பயின்று வந்துள்ளது.

 

 

724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றறிந்த சான்றோரிடம், அவர் மனம் கொள்ளும் வகையில் தான் கற்றதைச் சொல்வதோடு, அந்தக் கற்றவர்களிடம் இருக்கும் கூடுதல் அறிவைப் பெற்றுக்கொள்வதும்அவை அஞ்சாமை ஆகும்.

தொடைநயம்: இணைமோனை

 

725. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

பொருள்: அவையில் அஞ்சாமல் விவாதிப்பதற்கு, இலக்கண முறைப்படி சொற்களையும், தர்க்கவியலையும் கற்றுத் தெளய வேண்டும்.

தொடைநயம்: பொழிப்பு எதுகை, அடி எதுகை.

 

726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

பொருள்: வீரமற்றவர்க்கு வாளினால் என்ன பயன்? அதுபோல, அவையில் பேச அஞ்சும் நுன்னறிவு அற்றவர்களுக்கு நூலினால் என்ன பயன்?

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

எடுத்துக்காட்டு உவமையணி குறளில் பயின்று வந்துள்ளது.

 

727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

பொருள்: அவைக்கு முன்னே அஞ்சுபவன் கற்ற நூல், படைக்களத்தில் கோழை கையில் உள்ள வாளுக்குச் சமமானது.

தொடைநயம்: ஒரூஉ இயைபு

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

 

728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.

பொருள்: அறிஞர்கள் நிறைந்துள்ள அவையில் அவர்கள் மனங்கொள்ளும்படி ஒன்றை விளக்கத் தெரியாவதன், என்ன கற்றிருந்தாலும் பயனில்லை.

தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ எதுகை.

 

729. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.

பொருள்: ஆன்றோர் நிறைந்த அவையில், நல்ல நூல்களைக் கற்று, அவற்றின் நற்பொருளை அறிந்தும்கூடப் பேச அஞ்சுபவர்கள், கல்லாதவரைவிடத் தாழ்ந்தவர்களே.

தொடைநயம்: மேல்க்கதுவாய் எதுகை, அடி இயைபு.

 

730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

பொருள்: தாம் கற்றறிந்த் ஒன்றை அவைக்கு அஞ்சி, வெளிப்படுத்தாமல் இருப்பவர், உயிர்வாழ்ந்தும் இறந்தவர்க்குச் சமமானவரே.

தொடைநயம்: ஒரூஉ எதுகை.