Wednesday, July 2, 2025

பொருட்பால்: அரசியல்: 58. கண்ணோட்டம்

571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்: அருள்நோக்கு ஒன்று இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிவருகிறது.

காரிகை – அன்பு நிறைந்த பெண்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை, அடி எதுகை.

 

572. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

பொருள்: உலகியல் இயங்குவதற்குக் கண்ணோட்டம் என்கிற அருள்நோக்கே காரணமாகும். அத்தகைய கண்ணோட்டம் இல்லாதவர்கள் இந்த நிலத்துக்குச் சுமையே ஆவார்கள்.

பொறை – சுமை.

தொடைநயம்: அடி எதுகை.

 

573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: பாடலுக்குப் பொருத்தமில்லாத ராகத்தால் பயனில்லை. அதுபோல, அன்பு, இரக்கம் இல்லாத கண்களால் எந்த ஒரு பயனுமில்லை.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: ஒரூஉ இயைபு, அடி எதுகை.

 

574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: அன்பும் இரக்கமும் கொண்ட அருள்நோக்கு இல்லாத கண்கள், முகத்தில் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு என்ன நன்மை பயக்கும்?

தொடைநயம்: ஒரூஉ எதுகை

 

575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.

பொருள்: அருள்நோக்குப் பார்வையே கண்ணுக்குச் சிறந்தஆபரணமாகும். அது இல்லையென்றால், அந்தக் கண்கள் வெறும் புண்கள் என்றே கருதப்படும்.

தொடைநயம்: பொழிப்பு மோனை/எதுகை, அடி எதுகை.

 

576. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு

இயைந்து கண்ணோடா தவர்.

பொருள்: அருள்நோக்கு இல்லாத கண்களை உடையவர்கள், மரத்துக்கு ஒப்பானவர்களே.

குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ எதுகை/இயைபு.

 

577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

பொருள்: அருள்நோக்கு இல்லாதவர்கள் கண் இல்லாதவர்களே. கண் உடையவர்கள் எவரும் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பது இல்லை.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை/எதுகை, கீழ்க்கதுவாய் இயைபு, அடி இயைபு.

 

578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

பொருள்:தன்னுடைய கடமைக்கு ஊறு நேராத அன்பும் இரக்கமு் கொண்ட அருள்நோக்கு உடையவர்களுக்கே இந்த உலகம் உரிமையுடையது.

தொடைநயம்: பொழிப்பு மோனை.

 

579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

பொருள்: தம்மை வருத்த நினைப்பவரிடத்திலும் அன்பும் இரக்கமும் கொண்ட அருள்நோக்கோடு இருத்தலே சிறந்த பண்பாகும்.

ஒறுத்தாற்றல் – வருத்துதல்.

தொடைநயம்: அடி இயைபு.

 

 580. பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

பொருள்: அருள்நோக்கு உடைய பண்பாளர்கள், தம்மோடு பழகியவர்கள் தம் கண் முன்னே தனக்கு நஞ்சு கலந்து கொடுத்தாலும் அதை வாங்கி அருந்திவிட்டு, அவர்களோடு இயல்பாகப் பேசி மகிழ்ந்திருப்பார்கள்.

தொடைநயம்: ஒரூஉ எதுகை.