Thursday, July 3, 2025

பொருட்பால்: அரசியல்: 55. செங்கோன்மை

541. ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை.

பொருள்: நன்கு ஆராய்ந்து, எந்தப் பக்கமும் சாயாமல், குற்றம் இன்னதென்றும், அதற்கான தண்டனைகள் இவை எனவும் உரிய அறிஞரோடு ஆராய்ந்து நீதி செய்வதே செங்கோன்மையாகும்.

தொடைநயம்: அடி இயைபு.

 

542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்: உலக உயிர்கள் அனைத்தும் வானத்திலிருந்து பெய்ய்உம் மழையை எதிர்பார்த்து உயிர்வாழும். அதுபோல, மன்னனின் செங்கோலை நோக்கியே மக்களின் வாழ்வு அமையும்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: இணைமோனை, அடி இயைபு.

 

543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

பொருள்: அந்தணர்களால் போற்றி ஓதப்படும் மறைநூலுக்கும், அது வலியுறுத்தும் அறத்துக்கும் முதன்மையாய் இருப்பது மன்னனின் முறைதவறாத செங்கோல்தான்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை.

 

544. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்: தனது மக்களை அரவணைத்து, நடுவுநிலைமை தவறாது ஆட்சி செய்கிற மன்னவனின் அடியைப் பின்பற்றி மக்கள் நடப்பர்.

தழீஇ-இன்னிசை அளபெடை,

கோல், உலகு-ஆகுபெயர்கள்.

தொடைநயம்: அடி இயைபு.

 

545. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்: நீதிமுறை தவறாது, செங்கோன்மையுடன் ஆட்சிபுரியும் மன்னவனின் நாட்டில் மழையும் விளைச்சலும் குன்றவே குன்றாது.

பெயல்-மழை.

தொடைநயம்: அடி எதுகை.

 

546. வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்: ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவன் கையிலிருக்கும் வேல் அல்ல. நீதிமுறை தவறாமல் ஆட்சி செய்யும் செங்கோல்தான். அது எப்போதும் வளையாது இருக்க வேண்டும்.

வென்றி – வெற்றி,

கோடாது – வளையாது.

தொடைநயம்: அடிமோனை/எதுகை.

 

547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்: மன்னன் மக்களைக் காப்பான். மன்னவனை அவன் முறைதாழாது மேற்கொண்ட ஆட்சிமுறை காக்கும்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் இயைபு, அடி எதுகை.

 

548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்: அணுகுதலில் எளிமையும், நீதி தவறாமல் ஆட்சி செய்வதுமே மன்னனுக்கு அழகு. இதிலிருந்து தவறும் மன்னவனுடைய நாடு எதிரிகள் இல்லாமல் தானே அழியும்.

தொடைநயம்: அடி இயைபு.

 

549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

பொருள்: தன்னுடைய மக்களைப்பிறர் வருத்த அனுமதிக்காமலும், தானும் அவர்களைவருத்தாமல் பேண வேண்டும். அதேசமயம், , அவர்களிடம் குற்றம் கண்டவிடத்து, அவர்களைத் தண்டிப்பது அரசனுக்குக் குற்றமாகாது. அது அரசனது தொழில்.

வடு – குற்றம்.

தொடைநயம்: பொழிப்பு மோனை.

 

550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

பொருள்: கொலை உள்ளிட்ட குற்றங்களைச் செய்பவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்குதல், பயிர்களிடையே வளர்கின்ற களைகளைப் பறித்தலுக்கு ஒப்பானதாகும்.

குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

பைங்கூழ் – பசும்பயிர்.

தொடைநயம்: இணைமோனை.