Wednesday, July 9, 2025

அறத்துப்பால்: இல்லறவியல் 08. அன்புடைமை

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

பொருள்: ஒருவர் மீதான நம்முடைய அன்பை எத்தனை திட்டமிட்டு மறைத்துவைத்தாலும், அவர்களுக்குத் துன்பம் ஒன்று நேரிடும்போது, நம் கண்கள் நம்மை மீறியும் கண்ணீர் சிந்தி அவர்மீதான நமது அன்பை அம்பலப்படுத்திவிடும்.

துன்பமான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக புன்கணீர் என வள்ளுவர் கூறினாலும், கண்களை ஒத்த நம் அன்பிற்குரியவர்களை நெடுநாளைக்குப் பின் சந்திக்க நேர்ந்தால், நம் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியும் என்கிற பாவாணரின் விளக்கமும் சுவையானது.

தொடை: மேல்க்கதுவாய் மோனை, அடி எதுகை.

72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்: உள்ளத்தில் அன்பில்லாதவர்கள், எல்லாப் பொருட்களையும் தமதாக்கிக்கொண்டு வாழ்வார்கள். அன்புடையவர்கள், தமது உடலையும் பிறருக்காக வழங்கும் இயல்புடையவர்களாகத் திகழ்வார்கள்.

என்பு என்ற சொல் எலும்பைக் குறித்தாலும், இங்கு உடலைக் குறித்து வந்துள்ளதால், இது சினை ஆகுபெயர்.

தொடை: ஒருவு இயைபு/மோனை/எதுகை, அடி எதுகை.

73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்: உயிருக்கு உடலோடு இருக்கிற தொடர்பால் பெற்றதே  நம் வாழ்வு. எனவே அதன் உண்மையான பயன் என்பது, அன்போடு இணைந்த செயலாக அமைதல் வேண்டும் என்கிற கலைஞரின் விளக்கம் நுட்பமும் எளிமையும் இனிமையும் கொண்டது.

தொடை: ஒரூஉ மோனை, அடி எதுகை, அடி இயைபு.

74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

பொருள்: உறவினரிடம் நாம் காட்டும் அன்பின் நீட்சியாய், நாம் எல்லோரிடத்திலும் அன்பு செய்யத் தொடங்கிவிடுவோம். இத்தகைய வழக்கத்தைக் கைக்கொண்டால், நாம் தேடிச் செல்லாமலேயே நமக்கு நட்புகள் அமையும். அந்த நட்புகளின் மூலமாக நாம் விரும்பியவற்றை அடைய இயலும்.

நாடாச் சிறப்பு என்ற சொல்லுக்கு, வருந்தித் தேடாமல் நாம் அடையும் சிறப்பு என்கிற பாவாணரின் விளக்கம் மிகப் பொருத்தமானது.

நண்பு: நட்பு என்பதன் இடைப்போலி,

நாடாச் சிறப்பு: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

தொடை: கீழ்க்கதுவாய் மோனை, ஒருவு இயைபு.

75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்: உலகில் சிறப்போடும் புகழோடும் வாழ்ந்தவர்கள் யார் எனில், அவர்கள் தங்கள் அன்றாடத்தை அன்பால் நிறைத்துக்கொண்டவர்களே.

தொடை: இணைமோனை, அடி எதுகை.

76. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்: கொடை முதலான அறச்செயல்களுக்கே அன்பு துணையானது என்று சொல்பவர்கள், போர் முதலான வீரச்செயல்களுக்கும் அதுவே துணை என்பதை அறிய மாட்டார்கள்.

அறியார்: வினையால் அணையும் பெயர்.

தொடை: கீழ்க்கதுவாய் மோனை, அடி எதுகை.

77. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

பொருள்: எலும்பில்லாத உடல்கொண்ட பூச்சி புழுக்களை வெயில் சுட்டெரிக்கும். அதுபோல அன்பில்லாத உயிர்களை அறம் பொசுக்கும்.

போல என்ற உவம உறுபு வெளிப்படையாக வந்துள்ளமையால், இக்குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடை: அடி எதுகை/இயைபு.

78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்: உள்ளத்தில் அன்பில்லாத உயிர்களின் அன்றாடம் என்பது, பாலைவனத்தில் பட்டுப்போன மரம் ஒன்று தளிர்த்ததற்குச் சமமானது. அதாவது, பட்டமரம் தளிர்க்காது, அன்பில்லாத வாழ்வும் சிறப்பேதும் அடையாமல் கெட்டழியும்.

அற்று என்கிற உவம உறுபு வெளிப்படையாகத் தோன்றியுள்ளதால், குறளில் பயின்றுள்ளது உவமை அணியாகும். வன்பாற்கண் என்ற சொல் வன்மையான பாலையிடத்தில் என்ற பொருள் தரும். கண் ஏழாம் வேற்றுமை உறுபு என்பதை நினைவில் கொள்ளவும்.

தொடை: ஒருவு எதுகை.

79. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

பொருள்: கண்ணுக்குப் புலப்படாத அகத்தின் உறுப்பாகிய அன்பு இல்லாவிட்டால், காண்பதற்குப் புலனாகிற  புறத்தின் உறுப்புகளான கை, கால், கண், மூக்கு, செவி, வாய், மெய் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் செயல்களால் என்ன பயன் விளையும்?

இல்லறம் என்கிற அக வாழ்வுக்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவனுக்கு தன் புற வாழ்வின் உறுப்புகளான இடம், பொருள், ஏவல் ஆகியவை எப்படி அவன் விரும்பிய பயன்களை அவனுக்கு வழங்கும்? என இரண்டு வகைகளில் வினாக்கள் எழுப்பிப் பொருள் காணுகிறார்கள். இரண்டுமே பொருத்தமானதும் சுவையானதும்தான்.

தொடை: அடி இயைபு.

80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்: உயிரோடு கூடிய உடல் என்பது அன்பின் வழிப்பட்டதாகும். அது இல்லாத உயிர்களின் உடல்கள், எலும்புகளைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பே ஆகும். அதாவது பிணத்திற்குச் சமம்.

தொடை: ஒருவு மோனை, அடி எதுகை.