Wednesday, July 9, 2025

அறத்துப்பால்: இல்லறவியல்: 08 விருந்தோம்பல்

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்: மனைவி, மக்கட்செல்வம், பொருட்செல்வத்தையும் பெற்று இல்வாழ்க்கை நடத்துவதன் நோக்கம், வருகின்ற விருந்தினர்களுக்கு உதவ வேண்டும் என்பதே.

அக்காலத்தில் உண்டிச்சாலையோ, விடுதிகளோ இல்லையென்பதால் தமிழர்களின் ஒவ்வொரு வீடும் விருந்தோம்பலை ஓர் நெறியாகப் போற்றின என்கிறார் தேவநேயப் பாவாணர்.

விருந்து-பண்பாகு பெயர்.

தொடை நயம்: ஒரூஉ இயைபு, ஒரூஉ எதுகை, இணைமோனை.

 

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பொருள்: விருந்தினரை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு, நாம் தேவர்கள் உண்ணும் அமுதத்தையே உண்டாலும், அது சாவைத் தடுக்கும் மருந்தே ஆனாலும், அப்படி உண்பது விரும்பத் தக்க செயல் அல்ல.

தொடை நயம்: அடி எதுகை

 

83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

பொருள்: விருந்தினர்களை நாள்தோறும் வரவேற்றுப் போற்றுபவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் பாழ்படுவது இல்லை.

வைகல்-நாள்தோறும், பரு-துன்பம்.

வருவிருந்து-வினைத்தொகை.

தொடை நயங்கள்: ஒரூஉ மோனை, அடி எதுகை, அடி இயைபு.

 

84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்: விருந்தினராய் வருபவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றுப் போற்றுபவனின் இல்லத்தில், திருமகள் மனமகிழ்ச்சியோடு தங்குவாள்.

அகனமர்தல்-மன மகிழ்ச்சி, முகனமர்தல்-முகமலர்ச்சி.

செய்யாள்-திருமகள்.

தொடை நயங்கள்: ஒரூஉ இயைபு, ஒரூஉ எதுகை.

 

85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

பொருள்: விருந்தினரைப் போற்றி, உணவளித்தபின் எஞ்சியவற்றை உண்பவனின் நிலத்தில் விதைத்துத்தான் அறுவடை செய்ய வேண்டுமா என்ன?

மிச்சில் உணவுக்கலத்தில் எஞ்சுவது, எச்சில் இலையில் எஞ்சுவது எனப் பாவாணர் தரும் விளக்கம் சுவையானது.

தொடைநயம்: ஒரூஉ மோனை.

 

86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

பொருள்: வந்த விருந்தினர்களை உபசரித்து, அவர்களை வழியனுப்பிவிட்டு,  இனி வரப்போகும் விருந்தினர்களை எதிர்நோக்கியிருப்பவன், தனது அடுத்த பிறவியில் வானத்தவர்களுக்கு நல்ல விருந்தினனாய் இருப்பான்.

செல்விருந்து, வருவிருந்து-வினைத்தொகைகள், நல்விருந்து-பண்புத்தொகை.

தொடைநயங்கள்: முரண்தொடை, அடி எதுகை, அடி இயைபு.

 

87. இனைத்துணைத்து என்பது ஒன்றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

பொருள்: விருந்தோம்பல் என்கிற வேள்வியின்  பயன் இவ்வளவு என நிச்சயமாக அளவிட முடியாது. அது வந்த விருந்தினரின் பண்புடைமையைப் பொறுத்தது.

 

88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

பொருள்: விருந்தோம்பல் என்னும் வேள்வியில் ஈடுபடாமல், நிலையில்லாத பொருட்செல்வத்தைப் பேணிப் பாதுகாத்துப் பின்  இழப்பவர்கள், “வாழ்வின் பற்றுக்கோட்டை இழந்துவிட்டோமே” என வருந்துவர்.

தொடை நயங்கள்: இணைமோனை, ஒரூஉ இயைப்உ.

 

89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

பொருள்: விருந்தோம்பல் என்னும் பண்பில்லாதவர்கள் பெருஞ்செல்வம் உடையவர்களாக இருந்தாலும், அவர்கள் வறுமையில் இருப்பவர்களே. அத்தகைய மனவறுமை பேதையர்களிடமே உண்டு.

தொடை நயம்: முரண்தொடை.

 

90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

பொருள்: முகர்ந்து பார்த்தால் அனிச்சமலர் வாடிவிடும். அதுபோல,விருந்தினரை மாறுபட்ட முகத்துடன் நோக்கிக் கடுமை காட்டினால், அவர்களும் வருத்தம் கொண்டு மனம் வாடிவிடுவர்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.