671. சூழ்ச்சி
முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள்
தங்குதல் தீது.
பொருள்: ஒரு செயலைத் தொடங்கும் முன்னர்
பலவகைகளில் ஆலோசிக்க வேண்டும். முடிவெடுத்த பின், அதைச் செயல்படுத்துவதில்
மேற்கொள்ளும் தாமதம் என்பது இழிவை உண்டாக்கும்.
தொடைநயம்: அடி எதுகை
672. தூங்குக
தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது
செய்யும் வினை.
பொருள்: காலம் தாழ்த்தித் தொடங்க வேண்டிய
செயல்களைக் காலம் தாழ்த்தியும், உடனே செய்யப்பட வேண்டிய செயல்களை உடனடியாகவும்
செய்து முடிக்க வேண்டும்.
தொடைநயம்: கீழ்க்கதுவாய் மோனை/எதுகை,
அடி மோனை/எதுகை
பாடலில் சொற்பொருள் பின்வருநிலையணி மற்றும்
முரண் அணிகள் பயின்று வந்துள்ளன.
673. ஒல்லும்
வாயெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய்
நோக்கிச் செயல்.
பொருள்: மேற்கொண்ட செயலை முடிந்தவரை
அனைத்து இடங்களிலும்,கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செயல்படுத்த
இயலாத நிலையில், அதை எப்படிச் செய்தால் நிறைவேற்றலாம் என ஆராய வேண்டும்.
தொடைநயம்: கீழ்க்கதுவாய் எதுகை, ஒரூஉ மோனை,
அடி எதுகை.
674. வினைபகை
என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத்
தெறும்.
பொருள்: ஒரு செயலையோ, வினையையோ முழுதாக
முடித்துவிட வேண்டும். அதைப் பாதியில் விட்டால், அது தீ வளர்ந்து கெடுப்பதுபோல
ஆகிவிடும்.
தொடைநயம்: ஒரூஉ எதுகை
எச்சம்-மிச்சம்
குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.
675. பொருள்கருவி
காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர
எண்ணிச் செயல்.
பொருள்: செய்யக்கூடிய செயல், அதைச்
செய்வதற்கான கருவி, அதற்கான உரிய காலம், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான வினை
மற்றும் அவ்வினையைச் செய்வதற்கான இடம் என ஐந்து அம்சங்களையும் ஆராய வேண்டும்.
இங்கு போர்த்தொழிலைக் கொண்டு இக்குறளை விளக்கும் பாவாணர், இவை ஒவ்வொன்றையும் தனக்கானது,
பகைவருக்கானது என இரண்டாகப் பகுத்துச் சொல்வது சுவையானது.
தொடைநயம்: அடி எதுகை
இருள்-மயக்கம்
676. முடிவும்
இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும்
பார்த்துச் செயல்.
பொருள்: ஒரு செயலைச் செய்வதற்கான முயற்சி,
அதை மேற்கொள்கையில் எதிர்படும் இடையூறு, அந்தச் செயல் முடிந்தபின் அது கொடுக்கும்
நல்ல பயன்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
தொடைநயம்: பொழிப்பு மோனை, கீழ்க்கதுவாய்
இயைபு
முடிவு-முயற்சி
677. செய்வினை
செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான்
உள்ளம் கொளல்.
பொருள்: ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன்,
அந்தச் செயலை ஏற்கனவே செய்து அதுபற்ற்றி நன்கு அறிந்தவனிடம் கருத்துக் கேட்க
வேண்டும். அதாவது, முந்தைய இரண்டு குறள்களில் சொன்ன எட்டு வகையான கோணங்களையும்
பிறனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தொடைநயம்: கூழை மோனை, ஒரூஉ இயைபு
உள்ளறிவான்: வினையாலணையும் பெயர்
678. வினையான்
வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால்
யானையாத் தற்று.
பொருள்: ஒருசெயலைச் செய்கையில், அதனோடு
தொடர்புடைய மற்றொரு செயலையும் செய்து முடிப்பதென்பது, யானையால் இன்னொரு யானயைப்
பிடிப்பதற்குச் சமமானதாகும்.
தொடைநயம்: இணைமோனை, கீழ்க்கதுவாய் எதுகை,
அடி எதுகை
குறளில் உவமையணி பயின்றுவந்துள்ளது.
679. நட்டார்க்கு
நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக்
கொளல்.
பொருள்: நண்பருக்கு நல்லன செய்வதைக்
காட்டிலும், பகைவரின் நண்பனைக் கண்டறிந்து தேவையறிந்து அவருக்கு உதவுவதே நல்லது.
தொடைநயம்: இணைமோனை, அடி எதுகை
680. உறைசிறியார்
உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர்
பெரியார்ப் பணிந்து.
பொருள்: சிறிய நிலத்துக்கு மன்னன்
எனப்படுபவர்கள், பகைவர்கள் தங்களைக் காட்டிலும் வலிமையாக இருந்தால், அவர்களைக்
கண்டு தனது உடன் இருப்பவர்களே அஞ்சினால் என்ன செய்வது? வேறு வழியின்றி
அவர்களுக்குக் கீழ்படிந்து தன் மக்களைக் காக்க கடமைப்படுவார்கள்.
தொடைநயம்: இணைமோனை, ஒரூஉ எதுகை.