Saturday, May 17, 2025

பொருட்பால்: நட்பியல் - அதிகாரம் 80 நட்பாராய்தல்

791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

பொருள்: ஒருவரை நட்பாகக் கொண்டுவிட்டால், அந்த நட்பிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. எனவே, ஒருவரைப் பற்றி நன்கு ஆராயாமல் நட்புகொள்வது துன்பத்தைக் கொடுக்கும்.

தொடைநயம்: ஒரூஉ மோனை/எதுகை

 

792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

பொருள்: மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்து, ஒருவரோடு நாம் நட்புகொள்ளாவிட்டால், அந்த நட்பு நமக்கு சாகும் அளவு துன்பத்தையே தரும்.

கேண்மை – நட்பு

கடைமுறை – இறுதி

 

793. குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.

பொருள்: ஒருவருடைய பண்பு, நல்ல குடியில் பிறத்தல், செய்த பிழைகள், சுற்றத்தாரோடு நட்புறவாடல் போன்றவற்றை அறிந்துகொண்டு அவரோடு நட்புகொள்ள வேண்டும்.

தொடைநயம்: முற்றுமோனை

 

794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

பொருள்: நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் ஏதேனும் பழி சொல்லிவிடக்கூடாது என அச்சம் கொள்பவனை எவ்வகையிலும் நட்பாக்க வேண்டும்.

 

795. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

பொருள்: நாம் கண்ணீர்விட்டு மனம் கசியும் அளவுக்கு நம்மைத் திட்டி, நாம் செய்த குற்றத்தைச் சுட்டுபவர், நல்லவை அல்லாதவற்றை நமக்கு எடுத்துரைப்பவரின் நட்பை ஆராய்ந்து தேர்ந்துகொள்ள வேண்டும்.

தொடைநயம்: இணைமோனை, ஒரூஉ எதுகை

 

796. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

பொருள்: துன்பமும் நமக்கு நன்மையானதே. காரணம், அந்தத் துன்பம்தான் நமக்கு உண்மையான நண்பர்கள் யார் என்பதை அளந்து சொல்லும் கோலாக இருக்கிறது.

கேடு என்பதைக் கோலாக உருவகித்த வள்ளுவர், நண்பரை உருவகிக்கவில்லை. எனவே இக்குறளில் ஒருமருங்குருவக அணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: அடி எதுகை

கிளைஞர் – நண்பர்.

 

797. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்: அறிவில்லாதவர்களின் நட்பைவிட்டு நீங்கிவிடுவது ஒருவருக்கு நன்மை உண்டாக்கும்.

ஒரீஇ-இன்னிசை அளபெடை

பேதையார் – அறிவற்றவர்

கேண்மை – நட்பு

 

798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

பொருள்: உள்ளத்தின் ஊக்கத்தைக் குறைக்கும் எண்ணங்களை எப்போதும் எண்ணக்கூடாது. அதுபோல, துன்பத்தில் கைவிடுபவர்களின் நட்பை மீண்டும் கொள்ளக்கூடாது.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: இணைமோனை, கீழ்க்கதுவாய் எதுகை

 

799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.

பொருள்: கேடு வந்தபோது கைவிட்டவரின் நட்பை, இறக்கும் தருவாயில் நினைத்தாலும்அந்த நினைப்பு உள்ளத்தைத் தீயெனச் சுடும்.

அடுங்காலை – சாகும் தருணம்

தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ இயைபு

 

800. மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

பொருள்: குற்றமற்றவர்களின் நட்பைப் பற்றிக்கொள்ள வேண்டும். தனக்கு ஒப்பில்லாத தகுதியற்றவர்களின் நட்பை அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்தேனும் விட்டுவிடுதல் வேண்டும்.    

மாசற்றார் – குற்றமற்றவர்

தொடைநயம்: இணைமோனை, அடி எதுகை.